சினிமா

"நான் பேசினாலும் பேசாவிட்டாலும் பிரச்னைதான்..!" தர்மன் பட விழாவில் ரஜினி பேச்சு!

By Christon
24 Jun 2026, 01:05 PM
"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 173' திரைப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. 'தர்மன்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "நான் பேசினாலே அது எனக்கும் பிரச்சினை, உங்களுக்கும் பிரச்சினைதான். பேசாமல் இருந்தால் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள்; பேசினால் அதற்கும் ஒரு பிரச்சினை செய்வார்கள். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது என்பதை ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்து கொண்டேன்" என்றார்.

நான்காவது இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

இப்படத்தின் இயக்குநர் மாற்றம் குறித்துப் பேசிய ரஜினி, "தர்மன் படத்திற்கு அஸ்வத் நான்காவது இயக்குநர் ஆவார். முதலில் ரவிக்குமார், பின்னர் சுந்தர் சி, அதன்பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி, கடைசியாக அஸ்வத் இயக்க உள்ளார். சிபி சொன்ன அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட கதை எனக்குப் பிடித்திருந்தது; ஆனால் அது ரொம்ப சென்சிட்டிவ் சப்ஜெக்ட் என்பதால், அதற்கு இன்னும் கூடுதல் காலம் தேவைப்படும் எனக் கருதி தள்ளி வைத்துவிட்டோம்" என்று விளக்கினார். மேலும், அஸ்வத்தின் 'டிராகன்' படத்தில் இருந்த நல்ல மெசேஜ் தனக்குப் பிடித்திருந்ததாகவும், கூட்டு முயற்சியால் இப்படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கமலுடனான நட்பு

தயாரிப்பாளர் கமல்ஹாசன் தன் மீது வைத்துள்ள அசாத்திய நம்பிக்கையைப் பாராட்டிய ரஜினி, "கதையை நான் கேட்கவில்லை, நீங்களே கேட்டுச் சொல்லுங்கள் என்று கூறி, படத்தின் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார். அதுவே எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தங்களது 50 ஆண்டுகால நட்பு குறித்துப் பேசிய அவர், "1975-களில் கமல் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தபோதே நான் திரையுலகிற்கு வந்தேன். 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் முதலில் ஜெய்கணேஷ் நடிக்க வேண்டிய பாத்திரத்தில், கமல் பேசித்தான் இயக்குநர் ஸ்ரீதர் என்னை நடிக்க வைத்தார். அந்தப் படத்தில் நான் செய்த மேனரிசங்களை முதன்முதலில் பாராட்டியவரும் கமலேதான். அவர் எனக்குச் செய்த உதவிகளையும், தந்த ஊக்கத்தையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது" எனத் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.