Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

மீண்டும் தள்ளிபோகிறதா பிரதீப் ரங்கநாதனின் 'LIK' திரைப்படம்?

By Christon
09 Dec 2025, 01:23 PM
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'LIK' திரைப்படம், திட்டமிட்டபடி டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகாமல், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்துள்ள 'LIK' (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) திரைப்படம், திட்டமிட்டபடி டிசம்பர் 18-ஆம் தேதி வெளியாகாமல், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' படத்தின் வெளியீட்டைக் கருத்தில் கொண்டு, படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

LIK திரைப்படத்தின் விவரங்கள்

இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகக் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நயன்தாரா மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இப்படத்திற்கான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற டிசம்பர் 18-ஆம் தேதி இப்படம் வெளியாகும் என முன்னர் படக்குழு தெரிவித்து இருந்தது.

வெளியீடு தள்ளிப்போகக் காரணம்

இந்த நிலையில், 'LIK' படம் திட்டமிட்டபடி வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வருகிற டிசம்பர் 19-ஆம் தேதி ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படம் வெளியாகிறது. இந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் குவித்துள்ளதால், 'LIK' வெளியீட்டைத் தள்ளிவைக்கப் படக்குழு முடிவு செய்துள்ளதாகவும், இதனால் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்களிடையே ஏற்பட்ட ஏமாற்றம்

'LIK' திரைப்படம் இந்த ஆண்டின் காதலர் தினத்தன்று வெளியாகும் என முதன் முதலில் கூறப்பட்டது. அதன்பின், செப்டம்பர் 18, அக்டோபர் 17, டிசம்பர் 18 என வெளியீட்டுத் தேதிகள் மட்டுமே மாறி மாறி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது பிரதீப் மற்றும் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.