சினிமா

இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

By Christon
21 Nov 2025, 01:30 PM
சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ் (X), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இசையமைப்பாளர் இளையராஜா புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா தாக்கல் செய்த வழக்கு

சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தாக்கல் செய்தார். தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்தக் கூடாது எனவும், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும், அனுமதியின்றிப் பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு பல்வேறு யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்கள்

இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் சரவணன் ஆகியோர், இளையராஜாவின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் பயன்படுத்தி மாற்றியும் வருவாய் ஈட்டுவதாக குற்றம் சாட்டினர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பெயரை, புகைப்படங்களைப் பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள், புகைப்படத்தையோ, பெயரையோ வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர் என்றும், இது இளையராஜாவின் தனிப்பட்ட உரிமையைப் பாதிக்கும் செயல் என்றும் வாதிடப்பட்டது. மேலும், சில நேரங்களில் அவதூறான கருத்துக்களும் பதிவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இன்றிப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்குப் பதில் அளிக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.