சென்னையில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்துப் பேசிய பேச்சால் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளான நடிகர் மாஸ்டர் மகேந்திரன், "தான் கூறிய கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை" என்று உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்சாரப் பற்றாக்குறை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மாஸ்டர் மகேந்திரன், "மின்வெட்டுப் பிரச்சினைக்காக முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டால் உங்கள் வீட்டுக்கு மின்சாரம் வந்துவிடுமா? ஆறு மாதத்திற்கு யாரும் கேள்வி கேட்காதீர்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், சோலார் பேனல் அமைப்பது போன்ற மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம் என்றும், தேவைப்பட்டால் தன் வீட்டிலிருந்து கூட மின்சாரம் எடுத்துக் கொள்ளுமாறும் அவர் பேசிய வீடியோ இணையத்தில் தீயாகப் பரவியது. மக்களின் அத்தியாவசியப் பிரச்சினையை உணராமல் பேசுகிறார் எனக் கூறி, நெட்டிசன்கள் பலரும் இவரை மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல்கள் மூலம் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
"சர்ச்சைக்குரிய பேச்சின் பின்னணி"
இந்தச் சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு மகேந்திரன் தற்போது விரிவான விளக்கம் அளித்துள்ளார். தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல், சில விநாடிகளை மட்டும் வெட்டி எடுத்து தவறாகப் பரப்பிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் என்று குறிப்பிட்ட அவர், கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் மின்சாரத்தில் இயங்குவது போல, தமிழகத்திலும் எதிர்காலத் தீர்வாகச் சூரிய ஒளி மின்சாரத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் அப்படிப் பேசியதாகக் கூறியுள்ளார்.
"பின்வாங்கப் போவதில்லை"
தன் மீதான ட்ரோல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள மகேந்திரன், "உண்மையை முழுமையாக அறியாமல் விமர்சிப்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும், நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை" என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தான் கூறியது மக்களுக்கு எதிரானது அல்ல என்றும், எதிர்கால மின்சாரப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு குறித்தே பேசியதால், இந்த விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.