சினிமா

'துருவ நட்சத்திரம்' படத்தின் அப்டேட் கொடுத்த GVM!

By Jayakumar
13 Jun 2025, 06:59 AM
'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் ரீத்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் 'ஒரு மனம்', 'His name is John' உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படம் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு உருவான இந்த படம், நிதி உள்ளிட்ட பல பிரச்னைகளால் வெளியாகாமல் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

இருப்பினும் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் படம் வெளியாவதாக படக்குழு அறிவித்து தீவிர புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், சில பிரச்னைகளால் படம் வெளியீடு ஒத்திவைப்பதாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்தார். இதனையடுத்து படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதற்கிடையில், 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடிக்க சூர்யாவை அணுகியதாகவும், ஆனால் கதையில் உடன்பாடில்லை என அவர் விலக்கியதாகவும் கெளதம் வாசுதேவ் மேனன் கூறினார். மேலும், சூர்யா தன்னை நம்பவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தார். இவரது பேச்சு ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த நேர்காணலில் கலந்துகொண்ட கெளதம் வாசுதேவ் மேனன், "'துருவ நட்சத்திரம்' படத்தின் திரை வெளியீட்டுக்கு பிறகுதான் மற்ற படங்களின் வேலையை தொடங்குவேன். நான் அடுத்த எந்த படங்களிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. சில திரைப்பட முதலீட்டாளர்களிடம் படத்தை காண்பித்தோம், அவர்களுக்கு பிடித்துள்ளது. படத்தின் மீது சில சட்ட சிக்கல்கள் இருக்கிறது, அதனை தீர்த்து வருகிறோம். இந்த படம் கண்டிப்பாக வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதனால் பல ரசிகர்கள் உற்சாகம் அடைந்தாலும், சிலர் படத்தை ஓடிடியிலும் யூடியூப் தளத்திலும் வெளியிடுவதுதான் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு ஒரே வழி என விமர்சித்து வருகின்றனர்.