கட்டா குஸ்தி திரைப்படத்தின் முதல் பாகம் குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள கட்டா குஸ்தி 2 திரைப்படம் ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியால், இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இப்படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு இயக்கியுள்ள நிலையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, முனீஸ்காந்த், கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகியிருந்த டிரைலர் மற்றும் முதல் இரண்டு பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' பாடலும் அதே வரிசையில் கவனம் பெற்றுள்ளது.
மோகன் ராஜன் வரிகளில் உருவாகியுள்ள இந்தப் பாடலை சத்யன் மஹாலிங்கம் பாடியுள்ளார். திருமண வாழ்க்கையில் கணவன் சந்திக்கும் அன்றாட நகைச்சுவையான தருணங்களை கலகலப்பாக வெளிப்படுத்தும் வகையில் பாடல் உருவாகியுள்ளது. துள்ளலான இசை, வேடிக்கையான வரிகள் மற்றும் விஷ்ணு விஷாலின் உற்சாகமான திரை தோற்றம் ஆகியவை பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 'ஹவுஸ் ஹஸ்பண்ட்' பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் 'கட்டா குஸ்தி 2' ரசிகர்களை கவருமா என்பது ஜூலை 3-ஆம் தேதி தெரியவரும்.