வருவாய்ப் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க முன்வரக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்றைய தினம் 30-க்கும் மேற்பட்ட திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது..
தென்னிந்திய திரையுலகில் தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களிலும் நடிகர்-நடிகைகள் பங்கெடுக்க வேண்டும் எனக் கோரி, வருமானப் பகிர்வு முறையில் நடிக்க முன்வர வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே. எம். தமிழ்குமரன் கூறியதாவது, ஆந்திர மாநிலத்தில் ஒரு படம் தோல்வியடையும்போது, அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இன்னொரு படம் நடித்துத் தருவதாக நடிகர் உறுதியளிக்கிறார்.
தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் நடிகர்களும் பங்கு கொள்கின்றனர். இதுபோல, தமிழ்த் திரையுலகிலும் நடிகர்களும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி, இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
இருப்பினும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த பிறகு, பேச்சுவார்த்தை நடத்தலாம் என தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது.
ஆனால், உடனடி பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்தது. இல்லையெனில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்த நிலையில், இன்று காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
வேலைநிறுத்தம் காரணமாக, திரைப்படம் தொடர்பான எந்தப் பணிகளும் மேற்கொள்ளப்படாததால், 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.