சினிமா

"தோல்வி பயம் தெரிகிறது": தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசை விளாசிய நடிகர் பிரகாஷ் ராஜ்!

By Christon
15 Apr 2026, 11:11 AM
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வரவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிராகத் தென்னிந்தியத் தலைவர்கள் திரண்டு வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் தனது காட்டமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரம் பறிபோகும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளார்.

கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், "மத்திய அரசிடம் தோல்வி பயம் தெளிவாகத் தெரிகிறது; அதனால்தான் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் திணிக்க முயல்கிறது" எனச் சாடியுள்ளார். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பையே இந்த அரசு ஆபத்துக்குள்ளாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்ப்புக் குரல்: "நடக்க விடமாட்டோம்"

தென்னிந்தியாவின் அரசியல் வலிமையை முடக்கும் இந்த முயற்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ள அவர், "இதை நாங்கள் நடக்க விடமாட்டோம்" எனத் தனது பதிவில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.