சினிமா

23 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பிரசாந்த்-ஹரி கூட்டணி.. எகிறும் எதிர்பார்ப்பு

By nagalekshmi
06 Apr 2025, 03:17 PM
நடிகர் பிரசாந்த் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரசாந்த். சில காரணங்களால் நடிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான ’அந்தகன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ’அந்தகன்’ திரைப்படம் இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக்காகும்.

இதையடுத்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படத்தில் நடிகர் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து, நடிகர் பிரசாந்த் நடிக்கும் 55-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் ஹரி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.