சினிமா

பாதம் தொட்டு கேட்கிறேன்.. ’பறந்து போ’ படம் குறித்து இயக்குநர் பாலா!

By MUTHUKRISHNAN
28 Jun 2025, 01:54 AM
”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்” என ‘பறந்து போ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் இயக்குநர் பாலா.
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இயக்குநர் ராமின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் வேறு சில படங்களில் கமிட் ஆகியிருந்த காரணத்தினால் ’பறந்து போ’ திரைப்படத்திற்கு அவர் முழுமையாக இசையமைக்கவில்லை. பின்னணி இசையினை மட்டும் யுவன் கவனித்துக்கொள்ள, பாடல்களுக்காக பறந்து போ திரைப்படத்தின் மூலமாக முதன் முறையாக சந்தோஷ் தயாநிதியுடன் கைக்கோர்த்துள்ளார் இயக்குநர் ராம். இன்று நடைப்பெற்ற இசை வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாலா, வெற்றிமாறன், மிஷ்கின், விஜய் உட்பட திரையுலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் பங்கேற்ற நடிகரும் இயக்குநருமான கஸ்தூரிராஜா கூறுகையில், "இப்படி ஒரு வித்தியாசமான ஆடியோ லான்ச் பார்த்ததில்லை. எனக்கு தெரிந்தது இயக்குநர் ராம் மட்டுமே. பாலாவுடன் அவரைப் பார்த்து இருக்கிறேன். எனக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பெரிய இயக்குநர், ஒருவர் பெரிய நடிகர். என்னதான் அவர்களுக்கு பணம், புகழ் இருந்தாலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தகப்பன் என்று நேரம் செலவிடுவதை பார்க்கும் போது தான் நான் இதை மிஸ் செய்து விட்டேனே என்று பொறாமையாக இருக்கிறது. அற்புதமான படைப்பாளி ராம். இந்தப் படமும் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைய வாழ்த்துக்கள்" என்றார்.

படத்தலைப்புக்கே பாராட்ட வேண்டும்:

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேசுகையில், " 'பறந்து போ' எனத் தலைப்பு வைத்ததற்கே இயக்குநர் ராமை பாராட்ட வேண்டும். ஏனெனில் எல்லோரும் பறப்பதற்கு பயப்படும் காலம் இது. சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். சிவா அருமையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளை ரசித்து பார்த்தேன். வயல்ன்ஸ் படங்களுக்கு மத்தியில் குழந்தைகள் குடும்பத்தோடு பார்க்கும்படி இந்தப் படம் வந்திருக்கிறது. குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கும் அன்பை பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

மருத்துவர் கு. சிவராமன் கூறுகையில், "சில ஜப்பானிய படங்களைப் பார்க்கும்போது நம் ஊரிலும் அதேபோன்று படங்கள் வராதா என ஏங்கியதுண்டு. அந்த ஏக்கத்தைத் தீர்க்கும் விதமாக இந்தப் படம் வந்திருக்கிறது. ராமின் எல்லா படங்களும் நமக்கு நெருக்கமானது. ஒரு நல்ல கதை நமக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல, 'பறந்து போ' படமும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களிடத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.

நடிகர் சித்தார்த் கூறுகையில், "ராமுடைய எல்லா படங்களும் என்னுடைய படங்கள் தான். எங்கள் இருவருடைய படங்களும் ஒரே நாளில் வருகிறது. ராமின் இன்னொரு முகத்தை இந்தப் படத்தில் பார்க்கலாம். நடிகர் சிவா உள்ளே வந்ததால் அது சாத்தியமாகி இருக்கிறது. அஞ்சலியும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள குழந்தைகள் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்".

ராம் இந்த தமிழ்நாட்டிற்கு தேவை: பாலா

இயக்குநர் பாலா பேசுகையில், "ராம் பற்றி நிறைய பேர் பேசிவிட்டார்கள். இந்தப் படத்தை எப்படியாவது மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுங்கள். உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன். ராம் மாதிரியான ஒரு இயக்குநர் நமக்கும் தமிழ்நாட்டிற்கும் தேவை" என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், "ராம் தொடர்ச்சியாக படங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், ரிலீஸ் தாமதமாவதால் சின்ன கேப். சிவாவுடன் ராம் படம் செய்கிறார் என்றதும் சர்ப்ரைஸாகதான் இருந்தது. ' என் மகன் செய்யும் சேட்டைகளை படமாக எடுப்பேன். அதுதான் இது' என்றார். 'தங்கமீன்கள்' படம் ராமின் மகளுக்காக இந்தப் படம் அவர் மகனுக்காக. ராம் ஒரு மிகச்சிறந்த ஆசிரியர். படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசுகையில், "இந்தப் படத்தில் என்னுடைய ஆயிரமாவது பாடலை எழுதி இருக்கிறேன். இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஹ்மான் முன்னிலையின் இந்தப் பாடலை வெளியிட நினைத்தேன். ஆனால், அவர்களின் வெவ்வேறு கமிட்மெண்ட்டால் வர முடியவில்லை. என்னுடைய முதல் பாடலான 'இரும்பிலே ஓர் இருதயம்...' பாடலை எனது மனைவி தான் படித்துவிட்டு வாழ்த்தினார். அதனால், அவருடன் இந்த நிகழ்வு நடப்பதுதான் சரியானது. என்னுடைய மகனும் வந்திருக்கிறார். இந்தப் பாடலை கேட்பவர்கள் புகை பிடிப்பதை நிறுத்தினால்தான் எங்களுக்கு வெற்றி. படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்" என்றார்.

'பறந்து போ' படத்தின் டிரைலர் மற்றும் இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.