'அமரன்' படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஓம்'. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். சந்தனக் கட்டை கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை தனுஷே தயாரித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, தமிழ்நாட்டில் அதிகாலை 6 மணி காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சாதாரண திரையரங்குகளில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், இன்று அதிகாலை 6 மணியளவில் சென்னை கமலா திரையரங்கில் 'ஓம்' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கமே திருவிழாக் கோலம் பூண்டது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திரைப்படத்தைக் காண்பதற்காக நடிகர் தனுஷின் மகன்களான யாத்ரா, லிங்கா ஆகியோரும் கமலா திரையரங்கிற்கு வருகை தந்தனர். தந்தையின் திரைப்படத்தைப் பார்க்கும் மகிழ்ச்சியில் அவர்கள் திரையரங்கிற்கு வந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும், தனுஷின் படத்துக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்து ஆரவாரத்துடன் கொண்டாடினர். திரையரங்க வளாகம் முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்களின் உற்சாகக் குரல்களால் களைகட்டியது.
சமீபகாலமாக தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில், இந்தக் கொண்டாட்டத்திலும் அரசியல் சாயல் தென்பட்டது. தனுஷின் புகைப்படத்தை வைத்து, 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்', 'முதல்வர்' என்ற வாசகங்களுடன் சில ரசிகர்கள் கொண்டாடிய காட்சிகளும் கவனம் பெற்றுள்ளன.
சினிமா கொண்டாட்டத்துடன் அரசியல் எதிர்பார்ப்புகளையும் இணைத்து தனுஷ் ரசிகர்கள் வெளிப்படுத்திய இந்த உற்சாகம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.