Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

Thuglife: நீதிமன்றத்தை நாடிய கமல்.. முரண்டு பிடிக்கும் கன்னட அமைப்பினர்

By MUTHUKRISHNAN
02 Jun 2025, 09:52 PM
கமல் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், கர்நாடகவில் ஜூன் 5 ஆம் தேதி தக் ஃலைப் திரைப்படம் வெளியிடப்படாது என கன்னட அமைப்பினர் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை நாடியுள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' (Thug Life) திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கலை சந்தித்துள்ளது.

கன்னட மொழி தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன், நடைப்பெற்று முடிந்த தக் ஃலைப் திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்து கருத்து சர்ச்சையானது. கமல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவிலுள்ள திரையரங்குகளில் படத்தைத் திரையிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை (KFCC - Karnataka Film Chamber of Commerce) தெரிவித்துள்ளது.

இதற்கு மத்தியில், “நான் தவறாக பேசவில்லை என்ற போது, மன்னிப்பு கேட்க முடியாது” என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார். இதுவரை கமல் மன்னிப்பு கேட்காத நிலையில், கர்நாடகவில் திரைப்படம் வெளியாகுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தச் சூழலில் தான், 'தக் லைஃப்' படத்தை வெளியிட நீதிமன்றப் பாதுகாப்பைக் கோரி கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். கமல் நீதிமன்றத்திற்கு சென்றாலும், KFCC தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

KFCC தலைவர் எம். நரசிம்மலு இது குறித்துப் பேசுகையில், "கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்கும் வரை எந்தத் திரையரங்கிலும் இந்தப் படம் திரையிடப்படாது. இது மொழி மற்றும் இரு மாநிலப் பிரச்சனையாக மாறிவிட்டதாகவும், கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் அரசாங்கமே மன்னிப்புக் கோருமாறு வலியுறுத்தி வரும் நிலையில் கமல் அதற்கு உடன்படாமல் இருப்பது எதற்காக?” என குறிப்பிட்டுள்ளார். தக் ஃலைப் திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் கமல்ஹாசனுடன் இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும், தங்களது சட்டக் குழுவுடன் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவை KFCC எடுக்கும் என்றும் எம்.நரசிம்மலு தெரிவித்துள்ளார்.

"நாம் (தமிழ்நாடு - கர்நாடகா] அண்டை மாநிலத்தவர்கள். நாம் இருவரும் ஒன்றாக வேலை செய்கிறோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்குள்ள தண்ணீர் தமிழகத்துக்குச் செல்கிறது, அங்குள்ள மக்கள் இங்கு வந்து வசிக்கிறார்கள், நாம் எதிரிகளில்லை; நண்பர்கள்.மொழி விவகாரத்தின் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை" என கமல்ஹாசனின் கன்னட மொழி பற்றிய கருத்து சர்ச்சையானது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம்-கமல் இணையும் தக் ஃலைப் திரைப்படத்தில் சிம்பு,த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதீத எதிர்ப்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.