தமிழ் திரையுலகில் பிரபல பாடகியாக அறியப்படும் ஸ்வாகதா கிருஷ்ணா, சென்னையில் தமக்கு நேர்ந்த மிகக்கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ள ஸ்வாகதா கிருஷ்ணா, கடந்த சில ஆண்டுகளாகச் சினிமாவிலிருந்து விலகி ரிஷிகேஷில் வசித்து வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தாம் சென்னையை விட்டு வெளியேறியதற்கான அதிர்ச்சிகரமான காரணத்தைப் பகிர்ந்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழின் மிக முக்கியமான இசையமைப்பாளர் ஒருவரால் தாம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதுவே தம் வாழ்வின் இருண்ட காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துரோகமும் பிளாக்மெயிலும்
காதல் தோல்வியால் தாம் மன உளைச்சலில் இருந்தபோது, அந்த இசையமைப்பாளர் தமக்கு ஆறுதலாகப் பழகித் தனது குடும்பத்தினருக்கும் அறிமுகம் செய்துள்ளார். ஆனால், மெல்ல மெல்ல ஸ்வாகதாவிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததோடு, ஒரு நாள் தனது ஸ்டுடியோவிலேயே வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தச் செயலை ரகசிய கேமராவில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாகவும் ஸ்வாகதா வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். தம்மையும் தாண்டி பல பெண்களை அந்த இசையமைப்பாளர் இதேபோல் மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆதாரங்களுடன் சட்டப் போராட்டம்
அந்த இசையமைப்பாளரை அமெரிக்காவின் சர்ச்சைக்குரிய எப்ஸ்டீனுடன் ஒப்பிட்டுள்ள ஸ்வாகதா, சிறுமிகளைக் கூட அவர் தவறான நோக்கத்தில் கண்காணிப்பார் என்றும் கூறியுள்ளார். இதுவரை சமூகப் பழிச்சொல்லுக்கு அஞ்சி அமைதியாக இருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த இசையமைப்பாளர் குறித்த அனைத்து ஆதாரங்களையும் வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம், ஜி.வி. பிரகாஷ், அனிருத், இமான், ஜிப்ரான் போன்ற இசையமைப்பாளர்கள் மிகச் சிறந்த மனிதர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.