சினிமா

'பாகுபலி' ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்... 3-ம் பாகம் குறித்து புதிய அப்டெட்!

By Sumalekha
26 Jun 2026, 07:41 PM
'பாகுபலி 3' வரப்போகிறதா? நெட்பிளிக்ஸில் வெளியான ஒரு வீடியோ கிளிப் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, ராணா டகுபதி உள்ளிட்டோர் நடித்த 'பாகுபலி' திரைப்படம் இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய படமாக அமைந்தது. 2015-ல் வெளியான முதல் பாகமும், 2017-ல் வெளியான இரண்டாம் பாகமும் சேர்த்து உலகம் முழுவதும் சுமார் ரூ.2,500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தன.

இதையடுத்து, 2025-ல் 'பாகுபலி: தி எபிக்' என்ற பெயரில் இரண்டு பாகங்களும் இணைத்து மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இதற்கிடையில், படப்பிடிப்பின் பின்னணியில் நடந்த சுவாரஸ்யங்கள், சவால்கள் மற்றும் நடிகர்களின் அனுபவங்களை பதிவு செய்த 'Baahubali: The Torchbearer' என்ற ஆவணத் தொடர் தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.
இந்த ஆவணத் தொடரில்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

பிரபாஸ், அனுஷ்கா மற்றும் ராணா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசும் போது, "உலகம் இன்னும் அதற்கு தயாராக இல்லை... ஆனால் பாகுபலி..." என்று ராணா சஸ்பென்ஸாக கூறுகிறார். உடனே பிரபாஸ் சிரித்தபடி தனது கையில் மூன்று விரல்களை காட்ட முயல்கிறார். அதை அனுஷ்காவும், ராணாவும் சிரித்தபடி தடுக்கின்றனர். இறுதியில், "பாகுபலியின் பாரம்பரியம் தொடரும்..." என்ற வாசகத்துடன் அந்த வீடியோ நிறைவடைகிறது.

இந்த ஒரு காட்சியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, 'பாகுபலி 3' உருவாகும் முன்னோட்டமா? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ராஜமௌலி விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

தற்போது ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் முடிந்த பிறகே 'பாகுபலி 3' குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.