Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

NYIFF 2025: 'அங்கம்மாள்' படத்திற்கு சிறந்த திரைப்பட விருது!

By MUTHUKRISHNAN
25 Jun 2025, 06:40 PM
நியூயார்க் இந்தியத் திரைப்பட விழா (NYIFF-New York Indian Film Festival) 2025, வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு திரையிடப்பட்ட திரைப்படங்களின் அடிப்படையில் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'அங்கம்மாள்' என்கிற தமிழ் திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளது.
நியூயார்க் இந்தியத் திரைப்பட விழா நடப்பாண்டு 25-வது ஆண்டு கொண்டாட்டத்துடன் நியூயார்கில் அமைந்துள்ள ஏஞ்சலிக்கா பிலிம் சென்டரில் இருநாள் நிகழ்வாக (ஜூன் 20- 22) கோலகாலமாக நடைப்பெற்றது. ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது நீண்டகால தோழி டிஃபானி சென் உடன் வந்த ராபர்ட் டி நீரோவின் இந்த வருகை, விழாவின் மறக்க முடியாத தருணங்களில் ஒன்றாக அமைந்தது.

'அங்கம்மாள்' - சிறந்த திரைப்படம்

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் இந்தாண்டு திரைப்படங்களின் பிரிவில் இரண்டு தமிழ்படங்கள் திரையிட தேர்வாகின. ஒன்று விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அங்கம்மாள்' திரைப்படம். மற்றொன்று, ஹாரன்& சோபன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிம்பிள் மனுசன்' திரைப்படம்.

தமிழ் தவிர்த்து, அசாம், ஹிந்தி, மலையாளம், பஞ்சாபி போன்ற பல்வேறு பிராந்திய மொழிகளிலும் உருவாகிய திரைப்படங்களும் திரையிடப்பட்டன. நிகழ்வின் இறுதியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை ’அங்கம்மாள்’ என்கிற தமிழ் திரைப்படம் வென்றது.

இப்படத்தின் கதையானது பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின், கோடித்துணி என்கிற சிறுகதையினை தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தினை எஞ்சாய் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், மெட்ராஸ் பட புகழ் கீதா கைலாசம் நடித்துள்ளார். படத்தின் ஒன்லைன் கதை என்னவென்றால், 90-களின் நடுப்பகுதியில் கிராமத்தில் வசித்து வரும் அங்கம்மாளின் மகன் நகரத்திற்கு சென்று படித்து ஊர் திரும்புகிறார். அப்போது தனது தாய் ரவிக்கை அணியாததை சங்கடமாக உணர்கிறார். இதுக்குறித்து விவாதங்கள் எழுகிறது, அது எதிர்ப்பாராத ஒரு பிரச்சனை நோக்கி நகர்கிறது என்பது தான்.

புகழ்பெற்ற நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில், தமிழ் திரைப்படத்திற்கு சிறந்த விருது கிடைத்துள்ளதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த விழாவில் மற்ற பிரிவுகளில் விருது வென்றவர்கள்:

---> சிறந்த அறிமுகப் படம்: ஆரண்யா சஹாய் இயக்கிய 'ஹியூமன்ஸ் இன் தி லூப்'
---> சிறந்த இயக்குனருக்கான விருது: ஷோனாலி போஸ் ('எ ஃப்ளை ஆன் தி வால்') மற்றும் ரீமா தாஸ் ('வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் 2')
---> சிறந்த நடிகர்: நவாசுதீன் சித்திக் ('ஐ அம் நாட் அன் ஆக்டர்')
---> சிறந்த நடிகை: ஷர்மிளா தாகூர் ('தி ஏஷியன்ட்')
---> சிறந்த முழுநீள ஆவணப்படம்: 'எ ஃப்ளை ஆன் தி வால்' (ஷோனாலி போஸ் மற்றும் நிலேஷ் மணியார் இயக்கம்)
---> சிறந்த குறும்பட ஆவணப்படம்: 'அன் அரெஸ்டட் மொமென்ட்' (தேவ் பெனகல் இயக்கம்)
---> சிறந்த குறும்புனைவுத் திரைப்படம்: 'தர்ஸ்டே ஸ்பெஷல்' (வருண் டாண்டன் இயக்கம்)
---> சிறந்த திரைக்கதை: சுபத்ரா மகாஜனின் 'செகண்ட் சான்ஸ்'