சினிமா

அல்லு அர்ஜுன் – அட்லி கூட்டணியில் புதிய படத்தை தயாரிக்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம்?

By Jayakumar
07 Apr 2025, 11:32 AM
நடிகர் அல்லு அர்ஜுன் – அட்லி இயக்கத்தில் புதிய படத்தை பிரபல தமிழ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணி

பிரமாண்டத்திற்கு பேர்போனவர் இயக்குநர் ஷங்கர். இவரின் துணை இயக்குநராக இருந்து ஜெய், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் ‘ராஜா ராணி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகம் ஆனார் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து பாலிவுட்டில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்து ஜவான் படத்தினை இயக்கினார். இத்திரைப்படம் ரூ.1,140 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனால் பாலிவுட்டில் அட்லியின் மார்க்கெட் உயரத்தொடங்கியது.

புதிய படத்தை தயாரிக்கும் நிறுவனம்

ஜவான் படத்தைத் தொடர்ந்து அட்லி, நடிகர் சல்மானை வைத்து புதிய படத்தை இயக்குவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்தான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா-2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பு

இதை உறுதி செய்யும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, ‘மாஸூம் மேஜிக்கும் சந்திக்கும் இடம்’ என தெரிவித்துள்ளனர். இதனால் இந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பான் இந்திய படமாக உருவாக இருக்கும் இது அறிவியல் புனைகதையாக உருவாகலாம் என்றும் தெரிகிறது.