சினிமா

அஜித்தின் ரேசிங் பயணம் – அக்டோபரில் திரைக்கு வரும் ஆவணப்படம்!

By Sumalekha
17 Aug 2026, 06:05 PM
நடிகர் அஜித்குமாரின் மோட்டார் ரேஸிங் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேசிங்கிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். தனது ‘அஜித்குமார் ரேசிங்’ அணியின் மூலம் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களில் பங்கேற்று வரும் அவர், பல்வேறு முக்கிய தருணங்களைச் சந்தித்துள்ளார்.

அவரின், சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேசிங் களத்தில் அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ ஆவணப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேசிங் பயணத்தை பதிவு செய்த ஏ.எல். விஜய்:

அஜித்தின் சர்வதேச ரேசிங் அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆவணப் படத்திற்கு "குட் பேட் அக்லி" படத்திற்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார்.

துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற Asian Le Mans, 24H Series உள்ளிட்ட போட்டிகளில் அஜித் பங்கேற்ற காட்சிகள் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்கள், பின்னடைவுகள் மற்றும் முக்கிய வெற்றிகளும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, 2025 துபாய் 24H போட்டியில் அஜித் போடியம் வென்ற சாதனையும், அவரது சர்வதேச ரேசிங் பயணத்தின் முக்கிய தருணங்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய உள்ளன.

ரேசிங் பிரபலங்களும் பங்கேற்பு:

இந்த ஆவணப்படத்தில் இந்தியாவின் முன்னணி F1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரபலங்களும் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்தில் வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளராய் அறிமுகமாகும் ஷாலினி அஜித்குமார்:

இந்த படத்திற்கு முன்பு, அஜித்தின் அடுத்த படமான 'டேர் டெவில்' படத்தை மீண்டும் 'குட் பேட் அக்லி' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்குமார் தயாரிப்பாளராக அறிமுகமாவதாகவும் படக்குழு அறிவித்தது. மேலும் 'டேர் டெவில்' படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் எனவும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து, அஜித்தின் ஆவண படமான ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற படத்தையும் ஷாலினி அஜித்குமார் தயாரிப்பதாக படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது.

"ப்ரேவ் ஹார்ட் ப்ரொடக்ஷன்ஸ்" என்று தயாரிப்பு நிறுவனம் மூலம் ஷாலினி அஜித்குமார் இவ்விரு படங்களையும் தயாரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் சினிமா பயணத்தைத் தாண்டிய ரேசிங் உலகின் மறுபக்கத்தைப் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.