Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

நடிகர் தனுஷுக்கு சிக்கல்- ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ்!

By Christon
13 Feb 2026, 04:49 PM
நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் தனுஷுக்கு, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு திரைப்படத் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'நான் ருத்ரன்' திரைப்படம்

கடந்த 2016-ஆம் ஆண்டு 'நான் ருத்ரன்' என்ற படத்திற்காகத் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அந்தப் படத்திற்குப் பதிலாக, வேறொரு கதையை நடித்து, இயக்கித் தருவதாகத் தனுஷ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், தனுஷ் மட்டுமின்றி படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு முன்பணம் மற்றும் இதர செலவுகளுக்காகச் சுமார் 20 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளது.

ஆனால், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காததாலும், மற்ற படங்களுக்குத் தனது கால்ஷீட்டுகளைக் கொடுத்ததாலும் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாகத் தேனாண்டாள் பிலிம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தயாரிப்பு நிறுவனத்தின் நிபந்தனை

தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் அனுப்பியுள்ள நோட்டீஸில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 2025-ஆம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தனுஷ் தனது முடிவை விரைவில் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், செலவிடப்பட்ட 20 கோடி ரூபாயை ஈடுகட்ட வேண்டும் என்றும், அத்துடன் கூடுதல் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2025-இல் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் தற்போது பொதுவெளியில் வெளியாகித் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காலத்திற்குள் தீர்வு காணப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.