Kumudam News 24 X 7 AMP Article
சினிமா

14 வருஷத்திற்கு பிறகு ஒரு வெற்றி.. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம்!

By VASUKI
04 Apr 2025, 03:39 PM
சியான் விக்ரம் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றியை குவித்துள்ள திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 'வீர தீர சூரன் பார்ட் 2 ' திரைப்படம் கடந்த மார்ச் 27 ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாராட்டுக்களைக் குவித்து, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. வீர தீர சூரன் திரைப்படம் வெளியாவதற்கு பல தடைகள் வந்த நிலையிலும், அனைத்து தடைகளையும் கடந்து, ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருவதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

வீடியோ வெளியீடு

இது குறித்து நடிகர் சீயான் விக்ரம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, எனது ரசிகர்களுக்கு ஒரு மாஸானா, கிளாஸான, உண்மைக்கு நெருக்கமான ஒரு படைப்பை தர வேண்டுமென நீண்டநாட்களாக ஆசைப்பட்டேன். இயக்குநர் அருண்குமார் மூலம் அது நடந்தது. படம் ரிலீஸுக்கு முன்னால் பார்த்த நண்பர்கள் இது இந்த வருடத்தின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று பாரட்டினார்கள். ஆனால், ரிலீஸ் நாளான்று எதிர்பாராமல் ஏற்பட்ட தடங்கல்களால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு படம் முதல் ஷோ வரவில்லை என்றாலே அந்தப்படம் ஓடாது என்பார்கள்.

ரசிகர்களுக்கு நன்றி

எங்களது திரைப்படம் மாலைக்காட்சி தான் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் தந்த வரவேற்பு மறக்கமுடியாத அனுபவத்தைக் கொடுத்தது. குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் ஒவ்வொரு விஷயத்தையும், குறிப்பிட்டு பாராட்டிக் கொண்டாடினார்கள். படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியுள்ளார்கள். என் ரசிகர்களுக்கு நன்றியைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. என் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. உங்களுக்காக தொடர்ந்து நல்ல படங்கள் தருவேன் என்று கூறிய விக்ரம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

14 வருடத்திற்கு பின்

கடைசியாக 2011 ஆம் ஆண்டில் இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, நாசர், அமலா பால், சாரா நடிப்பில் வெளிவந்த தெய்வதிருமகள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியை பெற்றது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு வீர தீர சூரன் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக நடிகர் விக்ரமிற்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களின் பெரும் வரவேற்பில், உலகமெங்கும் 'வீர தீர சூரன் பார்ட் 2 ' அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் விக்ரமிற்கு வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றியை தந்துள்ளது.