Kumudam News 24 X 7 AMP Article
ஆன்மிகம்

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கோலாகலம்!

By VASUKI
11 Apr 2025, 02:05 PM
உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இந்த திருவிழா கடந்த 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நேற்றிரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நடைபெற்ற நிலையில், விழாவின் இறுதி நாளான இன்று பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.