எம்பெருமான் மகாவிஷ்ணு தானாகத் தோன்றிய ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களுள் ஒன்றாகத் திகழ்வது, ஸ்ரீமுஷ்ணம். இங்கே பூவராக ஸ்வாமி மேற்கு நோக்கி கோயில்கொண்டிருக்க, அவருக்கு நேர் பின் புறம் ஸ்ரீநிதீஸ்வராக ஈசன் கோயில்கொண்டுள்ளார்.
ஜில்லிகை என்னும் அசுரனை திருமால் இங்கு வதம் செய்ததால் ஜில்லிகாவனம் என பெயர் பெற்ற திருத்தலம். அஸ்வத்த விருட்சம் எனும் அரசமரமும், பிருந்தை என்னும் துளசியும் இத்தலத்திலேயே உயர்வு அடைந்ததாக ஸ்ரீமுஷ்ண மஹாத்மியம் தெரிவிக்கின்றது.
இங்கு பூவராக ஸ்வாமி மேற்கு நோக்கியும், அதற்கு நேர் பின்புறம் ஸ்ரீநிதீஸ்வரர் கிழக்கு நோக்கியும் அருள்பாலித்தருளுகின்றனர். இதுபோன்ற அமைப்பை வேறு எங்கும் காண்பது அரிதாகும். பூவராகர் நவநிதிகளை கொண்டு வந்து இங்கு வைத்தபோது அவற்றைக் காத்தருளியதால், ஈசனுக்கு நிதீஸ்வரர் என்ற திருப்பெயர் உண்டானது என்கிறது புராணம். இத்தல முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் இரண்டு திருப்புகழ் பாமாலைகளை சூட்டியுள்ளார்.
பூவராகர் ஆலயத்தின் பின்புறமாக கிழக்கு நோக்கியவண்ணம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது சிவாலயம். ஆலயத்தின் முன்னே நீர் நிரம்பி, நீராழி மண்டபத்துடன் அழகுற காட்சியளிக்கின்றது. நித்ய புஷ்கரணி மேற்குப் படித்துறைமேல் ராஜகோபுரமின்றி மொட்டை கோபுரமாக காட்சி தருகின்றது, தோரணவாயில் உள்ளே நேராக கொடிமரம், நந்தி மற்றும் பலிபீடம். இடதுபுறம் சிவன் சன்னதிக்கு செல்லும் வழியும், 16 கால் மண்டபமும் உள்ளன. இருபக்க மாடங்களில் கணபதியும் சாமுண்டீஸ்வரி அம்மனும் உள்ளனர்.
தலகணபதி தரிசனத்துக்குப் பின் ஸ்நபன மண்டபத்தில் உள்ள நால்வரை நமஸ்கரிக்கிறோம். மகா மண்டபத்தில் உற்சவரும் நடராஜரும் இருக்கின்றனர். கருவறையில் சிறிய சுயம்பு லிங்க வடிவினில் திருவருள் பொழிகின்றார் ஸ்ரீநிதீஸ்வரர். நித்தீஸ்வரர் என்றும் போற்றப்படுகின்றார். வணங்குவோர் வறுமை போக்கும் வள்ளல் இவர். கோஷ்டங்களில் நர்த்தன கணபதி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை மற்றும் பிக்ஷாடனர் அணிவகுக்கின்றனர்.
வாயு பாகத்தில் வீடு கொண்டு அருள் மழைப் பொழியும் ஸ்ரீகஜலக்ஷ்மியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாது. அருகே நடனமாடும் நர்த்தன கிருஷ்ணரும் எழுந்தருளியுள்ளார். தென்பாகத்தில் அருள் புரிகின்றார் ஸ்ரீ ஹரிபுரீஸ்வரர், ஷண்முகர், வள்ளி தெய்வானையுடன் மயில் மீது தரிசனமளிக்கிறார். இங்குள்ள கணபதி தனது கரங்களில் மாங்கனியோடு பலாச்சுளையையும் வைத்திருப்பது தனிச்சிறப்பான தோற்றம்.
தனியே கோயில் கொண்டருள்கின்றாள் ப்ருஹன்நாயகி அம்மை. சன்னதிக்கு முன் பலிபீடமும், நந்தி வாகனமும் உள்ளன. மூலஸ் தானத்தில் சதுர்புஜங்களுடன் அருட்தரிசனம் அளிக்கின்றாள் அன்னை இவ்வன்னையின் சிலை மூலிகைகளால் ஆனது என்றும் சொல்கின்றனர். தலவிருட்சமாக மிகப்பழமைவாய்ந்த நாகலிங்க மரம் மணம் வீசி நிற்கிறது. நவகிரகங்களின் தரிசனமும் கிடைக்கிறது.
கி.பி.1070 இல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட இவ்வாலயத்தில் சோழர்கால கல்வெட்டுகள் நிரம்பியுள்ளன. கல்வெட்டில் இவ்வூர் திருமுற்றம் என்றும், இத்தல ஈசர் திருமுற்றமுடைய மகாதேவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதி சோழர் காலத்தில் இருங்கோளப்பாடி திருமுட்டம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் சுங்கம் தவிர்த்த சோழநல்லூர் என்றும் வழங்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழன், விக்ரமசோழன் மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன.
இவ்வாலயம் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படுகிறது. சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடி ஸ்வாதி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கந்த தைப்பூசம், சிவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் போன்றவை சிறப்புற கொண்டாடப்படுகின்றன.
நிதி பற்றாக்குறையால் அவதிப்படுபவர்கள், நாணயங்களை நிதீஸ்வரர் பாதங்களில் வைத்து, அர்ச்சனை செய்து, அந்த நாணயங்களை எடுத்துச்சென்று, வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர். இதனால் பணக்கஷ்டங்கள் தீர்ந்து, தன வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.