Kumudam News 24 X 7 AMP Article
ஆன்மிகம்

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

By nagalekshmi
06 Apr 2025, 09:48 PM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு பங்குனித் திருவிழா ஏப்ரல் 2 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவில் வண்டி மாகாளி ஊர்வல வைபவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் விரதம் மேற்கொண்ட 10-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் காளி வேடம் அணிந்து வண்ண உடைகளில் நின்று நடனம் ஆடியபடி சென்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்ற வண்டி மாகாளி ஊர்வலம் சின்னக்கடை தெரு மண்டகப் படியினை சென்றடைந்தது.

தொடர்ந்து, ஸ்ரீ முத்தால பரமேஷ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. பரமக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வண்டி மாகாளி ஊர்வல வைபவத்தை கண்டு தரிசித்தனர். அப்போது மாட்டு வண்டி, கீழ பள்ளிவாசலை கடந்து செல்லும்போது கீழ பள்ளிவாசல் நிர்வாகிகள் விழா கமிட்டியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் பள்ளிவாசலை கடந்து செல்லும்போது மேளதாளங்கள் வாசிக்காமல் அமைதியாக சாமி ஊர்வலம் கடந்து சென்றது. தொடர்ந்து இஸ்லாமியர்கள், இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீரும் வழங்கினர். இந்த நிகழ்ச்சி மதத்தை மறந்து இந்துக்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையை உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.