ஈரானுடன் போடப்பட்டிருந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக, நேற்று பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறிவித்தது. இதனால் வளைகுடா பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்ததை அடுத்து, அமெரிக்கா தனது அடுத்தகட்ட வான்வழித் தாக்குதலை ஈரான் மீது ஏவியுள்ளது. இந்தத் தொடர் மோதல்களால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 7 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் டிரம்பின் உத்தரவின்படி, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை ஈரான் அச்சுறுத்துவதைத் தடுக்கும் வகையில் கூடுதல் தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன. சர்வதேச கடல் வணிகப் பாதையில் அத்துமீறிய ஈரானை அமெரிக்கா சும்மா விடாது" என்று பதிவிட்டுள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்வதால், இந்த வழியை மூடி உலக நாடுகளை மிரட்ட ஈரான் முயல்வதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானுடன் போடப்பட்ட தற்காலிக அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது. அவர்களுடன் நீண்டகால அமைதி உடன்படிக்கை சாத்தியமா என்று தெரியவில்லை; ஈரான் அரசு ஒரு நாணயமற்ற அரசு" என்று கடுமையாகச் சாடினார். இருப்பினும், இது மீண்டும் ஒரு முழுமையான போராக மாற வாய்ப்பில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போரை முடிக்க ஜூன் 17 அன்று போடப்பட்ட தற்காலிக ஒப்பந்தம் தற்போதைய தாக்குதல்களால் முற்றிலும் முடங்கியுள்ளது.