உலகம்

சிரியாவில் துயர சம்பவம்.. தேவாலயத்தில் குண்டுவெடிப்பு..!

By Christon
23 Jun 2025, 01:10 PM
சிரியாவில் தேவாலயத்திற்குள் மக்களோடு மக்களாக இருந்த மர்ம நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.
சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் புறநகரில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள மார் எலியாஸ் என்ற தேவாலயத்தில் நேற்று (ஜூன் 22) ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அடையாளம் தெரியாத நபர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளார்.

இந்த பயங்கரவாத சம்பவத்தில் தேவாலயத்தில் இருந்த 20 பேர் உயிரிழந்ததாகவும், 52 படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுவரை இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியா உள்துறை அமைச்சகம் இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தான் காரணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும்,"ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர், செயின்ட் எலியாஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து, துப்பாக்கிச் சூடு நடத்தி, பின்னர் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்" என்று உள்துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த சிரிய தகவல் தொடர்பு அமைச்சர் ஹம்சா முஸ்தபா, இது ஒரு பயங்கரவாத தாக்குதல். குற்றவியல் அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைத்து தாக்குதல்களில் இருந்தும் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் அதன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அரசு உறுதியளிக்கிறது என்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தேவாலயத்திற்குள் இருந்தவர்களில் ஒருவரான லாரன்ஸ் மாமரி கூறுகையில், "வெளியில் இருந்து ஒருவர் ஒரு ஆயுதத்துடன் நுழைந்து" துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார். மேலும் அவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்வதற்கு முன்பு மக்கள் அவரைத் தடுக்க முயன்றனர்" என்று கூறினார்.

மேலும், "ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசர வாகனங்கள் வருவதற்கு முன்பு உள்ளூர்வாசிகள் காயமடைந்தவர்களுக்கு உதவ முயன்றபோது, ​​சுமார் 10 பேரை சம்பவ இடத்திலிருந்து அப்புறப்படுத்த மாமரி உதவியுள்ளார்.