உலகம்

தமிழர்கள் தாயகம் திரும்ப கட்டுப்பாடுகளை தளர்த்திய இலங்கை அரசு

By Christon
12 Aug 2026, 07:22 AM
இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களது விருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், தங்களது விருப்பத்தின் பேரில் மீண்டும் இலங்கை திரும்புவதற்கான நடைமுறைகளை எளிதாக்கும் புதிய திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் தமிழர்களுக்காக தனி நாடு கோரி பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் 1983-ம் ஆண்டுக்குப் பிறகு உள்நாட்டுப் போராக மாறியது. சுமார் 30 ஆண்டுகள் நீடித்த இந்தப் போர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது.

போர் காலத்தில் ஏராளமான இலங்கை தமிழர்கள் பாதுகாப்புக்காக இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு அகதிகள் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கை திரும்ப விரும்பும் அகதிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் புதிய குடியேற்ற விதிமுறைகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய திட்டத்தில், போர் காலத்தில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் அவசரமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக பதிவு செய்தவர்கள் மீது உள்ள குடியேற்ற சட்டம் தொடர்பான வழக்குகள் மற்றும் சில சிக்கல்கள் தளர்த்தப்பட உள்ளன.

ஐ.நா. அகதிகள் அமைப்பின் உதவியுடனும், இந்தியாவில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலமாகவும், அவர்களின் இலங்கை குடியுரிமை உறுதி செய்யப்படும்.

இலங்கை திரும்ப விரும்புபவர்கள் மீது கொலை, தேசத்துரோகம் உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டுகள் உள்ளனவா என்பதும் விசாரிக்கப்படும். இதற்காக புலனாய்வு அமைப்புகள் மூலம் சோதனை நடத்தப்படும். சட்டரீதியான தடைகள் இல்லாதவர்கள், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்கள் வழியாக தற்காலிக பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கைக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தீவிர குற்றச்சாட்டுகள் இருப்பவர்கள் மட்டும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006 ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முன்பும், 2009 மே 19-ம் தேதி போர் முடிவுக்கு வந்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு குடிபெயர்ந்த இலங்கை தமிழர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர் இலங்கை திரும்பியுள்ளனர்?

ஐ.நா. அகதிகள் அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, 2002 முதல் 2022 பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சுமார் 18,000 இலங்கை அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர்.

மேலும், 2009 ஜனவரி முதல் 2025 ஜூன் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து 18,500-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு அரசு கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தது.

இருப்பினும், கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை தமிழர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனர். இலங்கை அரசின் மதிப்பீட்டின்படி, 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் சுமார் 89,000 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கை தமிழர்களுக்கு நடைமுறைகளை எளிதாக்கும் இலங்கை அரசின் இந்த புதிய முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.