உலகம்

உக்ரைன் குடியிருப்புப் பகுதியில் ரஷ்யா தாக்குதல்.. 14 பேர் உயிரிழப்பு..!

By VASUKI
19 Jun 2025, 01:14 PM
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியதில், உக்ரனை சேர்ந்த 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் தலைநகர் கீவ்-ல் வானுயர கட்டடத்தின் மீது இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 44-க்கும் மேற்பட்டோர் காயம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில், இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ட்ரோன் மற்றும் மிசைல்கள் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 14 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 44 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரைனின் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல், பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இடம்பெற்ற கீவ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வானுயர கட்டடத்தின் மீது ட்ரோன் மோதியதில் கட்டடத்தின் பல இடங்களில் தீப்பற்றியது. கட்டடத்தின் சுவருகள் இடிந்து விழுந்ததால், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உக்ரைன் அதிபர் வோலடிமிர் செலென்ஸ்கி, இந்த தாக்குதலை ‘பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரத் தாக்குதல்’ எனக் கடுமையாக கண்டித்துள்ளார். “உலகம் இது போன்ற மனிதாபிமான மீறல்களை பாராட்ட முடியாது. ரஷ்யா தண்டிக்கப்பட வேண்டும்,” என்றார் அவர்.

இதே நேரத்தில், ரஷ்ய அதிகாரிகள் இது குறித்து இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. கடந்த சில வாரங்களாக உக்ரைனின் நகரங்களுக்கு மீண்டும் மீண்டும் வான்வழி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால், இந்த தாக்குதல் என்பது சமீபத்தில் மிகவும் கொடிய தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

உலக நாடுகள் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து வருகின்றன. ஐநா சபை உள்ளிட்ட அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உரிய நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளன. உக்ரைன் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளும் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.