உலகம்

இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் சேதம்!

By Christon
15 Aug 2026, 08:49 AM
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் புளோரஸ் தீவுப் பகுதிக்கு அருகே இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

என்டே நகருக்கு வடமேற்கே 68 கி.மீ தொலைவில் ஆழமற்ற பகுதியில் இந்நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் 6.1 ரிக்டர் அளவுள்ள வலுவான அதிர்வுகளும் பதிவாகின.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு நுசா தெங்காரா, தெற்கு சுலாவேசி உள்ளிட்ட மாகாணங்களில் 0.5 முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் எழும்பக்கூடும் என இந்தோனேசிய வானிலை மையம் எச்சரித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மாவுமரே பகுதியில் கடல் நீர் உள்வாங்கியதால் சுனாமி அச்சம் காரணமாக பொதுமக்கள் உயரமான இடங்களை நோக்கிப் தப்பிய ஓடினர். எனினும், 19 முதல் 30 செ.மீ வரையிலான சிறிய அலைகளே பதிவானதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

ஜாகார்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய பேரிடர் மேலாண்மை முகமையின் செய்தித் தொடர்பாளர் பெர்டன் சுவார் பெலிடா பஞ்சைத்தான், "நிலநடுக்கத்தால் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இருவர் உயிரிழந்துள்ளனர். சேத விவரங்கள் குறித்த தரவுகள் சரிபார்க்கப்பட்ட பின் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தின்போது கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளும் பொதுமக்களும் பீதியடைந்து வெளியே ஓடினர்.

இந்தோனேசியா பசிபிக் "நெருப்பு வளைய" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2004-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 2.2 லட்சம் பேரும், 2018-ல் பாலு பகுதியில் ஏற்பட்ட சுனாமியால் 4,300-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.