அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் பதற்றத்திற்கு நடுவே, ஹார்முஸ் ஜலசந்தி வழியே பயணிக்க இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கதார் ஆகிய 4 நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி கடல் பாதையில் பிற நாடுகளின் கப்பல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 4 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் பாராளுமன்றக் குழுவின் மூத்த உறுப்பினரான அமீர் ஹயாத் மொகாதம் கூறுகையில், "இந்தியா, சீனா, ஈராக் மற்றும் கதார் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் எவ்வித தடையுமின்றி தாராளமாகச் செல்ல விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள சூழலில், அந்நாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்வதால், இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு அளிப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான மருந்துகளை இந்தியாவிடமிருந்து தடையின்றிப் பெற முடியும் என ஈரான் கருதுகிறது.
அதேவேளையில், சீனாவுடனான வர்த்தகம் மற்றும் அரசியல் ஆதரவைப் பலப்படுத்தவே சீனாவுக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி, சர்வதேசக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கியமான கடல் பாதையாகும். இந்தியாவின் மொத்தக் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதமும், எல்.பி.ஜி (LPG) சமையல் எரிவாயு இறக்குமதியில் 90 சதவீதமும் இந்த வழித்தடத்தின் மூலமாகவே இந்தியாவிற்கு வந்தடைகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களால் தொடங்கிய போரினால் இந்த கடல் வழியில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வந்த நிலையில், ஈரானின் இந்தத் தீர்மானம் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.