உலகம்

இந்தோனேசியா: அலுவலகக் கட்டடத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!

By Christon
09 Dec 2025, 05:37 PM
இந்தோனேசியாவில், ஒரு அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள 7 அடுக்குமாடிக் கட்டடத்தில் இன்று (டிசம்பர் 9) நண்பகல் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து மற்றும் மீட்புப் பணிகள்

தலைநகர் ஜகார்த்தாவில், கெமாயோரன் பகுதியில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடத்தின் முதல் தளத்தில் இன்று நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஏற்பட்ட தீயானது மிக வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், 29 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 3 மணிநேரம் போராடி அவர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழப்பு மற்றும் முதற்கட்டக் விசாரணை

இந்தத் தீ விபத்தில் சிக்கி மொத்தம் 22 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட 15 பெண்களும், 7 ஆண்களும் அடங்குவர் என இந்தோனேசிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.

விபத்து ஏற்பட்ட இந்தக் கட்டடம் டிரோன் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் என்றும், சோதனைப் பகுதியில் இருந்த பேட்டரிகளின் மூலம் தீ உருவாகியிருக்கக் கூடும் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.