உலகம்

FLORIDA ஜெட் விமானம் விபத்து.. பைலட்டின் திகிலூட்டும் கடைசி வார்த்தைகள்!

By Christon
02 Nov 2026, 05:35 PM
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள கிரீனேக்கர்ஸ் குடியிருப்புப் பகுதியில் சிறிய ரக ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து ஏற்படுவதற்கு முன்பு விமானி மற்றும் ஊழியர்கள் பதற்றத்துடன் பேசிய கடைசி நொடிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

டெக்சாஸில் இருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த 'லியர்ஜெட் 60' (Learjet 60) ரக விமானம், சுமார் 35,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது மோசமான வானிலை மற்றும் பனிப்பொழிவில் சிக்கியது. விமானம் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் கீழே இறங்கத் தொடங்கியபோது, விமான ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு அடுத்தடுத்து அபாயச் சமிஞ்சைகளை (Mayday) அனுப்பினர்.

விமானம் நிமிடத்திற்கு 10,000 அடி, பின்னர் 20,000 அடி என ஆபத்தான வேகத்தில் சரிந்த நிலையில், விமானக் குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய உரையாடலில், "We're Out Of Time (நேரம் முடிந்துவிட்டது)" என்று பதற்றத்துடன் அலறியுள்ளார். "நாங்கள் தரையில் மோதப் போகிறோம்" என்று அவர் கதறிய சில நொடிகளிலேயே விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது.

சுமார் 41,000 அடி உயரம் வரை சென்ற அந்த விமானம், கடுமையான இயந்திரக் கோளாறு மற்றும் வானிலை மாற்றத்தால் திடீரெனக் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துள்ளது.

நிமிடத்திற்கு 32,000 அடிக்கும் அதிகமான அதிவேகத்தில் கீழே நோக்கிப் பாய்ந்த விமானம், குடியிருப்புப் பகுதிக்கு அருகில் இருந்த சாலையின் ஓரத்தில் விழுந்து பெரும் தீப்பந்தமாக வெடித்துச் சிதறியது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பதிவான டேஷ்கேம் (dash-cam) காட்சிகளில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது.

இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த விமான ஊழியர்கள் உட்பட 9 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை மற்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிர்ஷ்டவசமாகத் தரைப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும், இணையத்தில் பரவி வரும் வீடியோக்களின் உண்மைத்தன்மை குறித்தும் விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.