Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

வெடிகுண்டு மிரட்டல்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

By VASUKI
13 Jun 2025, 06:34 PM
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புக்கெட்டில் அவசர தரையிறக்கப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சோதனை நடைபெற்றது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தகவல் வெளியானது.
தாய்லாந்தின் புக்கெட் தீவில் இருந்து இன்று காலை 8 மணிக்கு இந்திய நேரப்படி டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் புக்கெட்டில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விமானத்தில் இருந்த 156 பயணிகளையும் கீழே இறக்கி, சோதனை நடைபெற்றது.

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா இடமான புக்கெட் தீவிலிருந்து இந்திய தலைநகரான டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு (AI 332) இன்று காலை மிகவும் அவசரமாக மீண்டும் புக்கெட்டில் தரையிறக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானத்தில் மொத்தம் 156 பயணிகள் பயணம் செய்த நிலையில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணத்தின்போது விமானக் கட்டுப்பாட்டு மையத்துக்கு 'வெடிகுண்டு உள்ளதாக சந்தேகத்திற்கு இடமளிக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக விமானத்தினை புக்கெட் விமான நிலையத்திற்கே திருப்பி அவசரமாக தரையிறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும், அனைவரும் சீராக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். தொடர்ந்து, மிரட்டல் குறித்து தகவறிந்த தாய்லாந்து விமான நிலைய பாதுகாப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறை இணைந்து விமானத்தை முற்றுகையிட்டு தீவிர சோதனையை மேற்கொண்டனர்.

இந்த தீவிர சோதனையை அடுத்து விமானத்தில் எந்த வெடி குண்டும் இல்லை எனவும் இது புரளி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் விமானத்தில் பயணித்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விமானப் பயணங்களில் உள்ள பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது.