உலகம்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்.. உயிருடன் இருக்கிறாரா நெதன்யாகு?

By Christon
02 Mar 2026, 04:16 PM
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் மீது அதிரடி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகளின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அதற்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் வான்படைத் தளபதி அலுவலகம் ஆகியவை நேரடியாகத் தாக்கப்பட்டதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நெதன்யாகுவின் நிலை குறித்துப் பரபரப்பு

ஈரான் நடத்திய இந்த 'திடீர்' ஏவுகணைத் தாக்குதலில் பிரதமரின் அலுவலகம் சேதமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தாக்குதலின் போது பிரதமர் நெதன்யாகு அங்கிருந்தாரா அல்லது அவரது தற்போதைய நிலை என்ன என்பது குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஈரானிய ஊடகங்கள் அவரது நிலை "கேள்விக்குறியாக" உள்ளதாகத் தெரிவித்துள்ளன. இருப்பினும், இஸ்ரேல் தரப்பில் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை.

முக்கிய ராணுவத் தளங்கள் இலக்கு

பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, இஸ்ரேல் வான்படைத் தளபதியின் அலுவலகம் மற்றும் முக்கிய ராணுவக் கட்டுப்பாட்டு மையங்கள் மீதும் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்து வரும் நிலையில், அந்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பான 'அயர்ன் டோம்' பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்தாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது.