Kumudam News 24 X 7 AMP Article
உலகம்

அணு ஆயுத சோதனையா? ஈரான் மீது சந்தேகத்தை திருப்பும் உலக நாடுகள்!

By nishika
08 Oct 2024, 05:32 PM
அணு ஆயுதம் சோதனை மேற்கொண்டதன் விளைவாக ஈரானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கணித்துள்ளன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் காஸாவில் இதுவரை 35,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி விட்டனர். மேலும் காஸா நகரில் வீடுகள், மருத்துவனைகள் என அனைத்து கட்டடங்களும் இடிந்து முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளன.

இதனால் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காஸாவில் இருந்து வெளியேறி உணவு, உடை, மருத்துவ வசதிகளில் இன்றி பரிதவித்து வருகின்றனர். இந்த போரை உடனடியாக நிறுத்தும்படி ஐநா சபை இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் பல்வேறு உலக நாடுகள் வழியுறுத்தியும் இஸ்ரேல் தாக்குதலை(Israel Attack) நிறுத்த மறுத்து வருகிறது. 

போர் விதிகளை தொடர்ந்து மீறி வரும் இஸ்ரேல் ராணுவம்(Israel Army) மருத்துவமனைகள் மீதும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை கவலையடைச் செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு கூட தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகரில் உள்ள நிவாரண முகாம்களில் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான ஈரான் தற்போது இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. லெபானான் மீதும் ஹிஸ்புல்லாக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் விதமாக, ஈரான் வெகுண்டு எழுந்தது. 

அதன்படி கடந்த அக். 1ம் தேதி இரவு இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதனை சிறிதும் எதிர்பாராத இஸ்ரேல் ராணுவம் ஸ்தம்பித்து போனது. இதற்கு பதில் தாக்குதலாக லெபனான் மட்டுமின்றி சிரியாவையும் தரைவழியாகத் தாக்கி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்று அதிகாலை அளவில் ஈரானின் செம்னான் மாகாணத்தில் 4.5 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது இயற்கையான நில அதிர்வா அல்லது ஈரான் அணு ஆயுத சோதனை மேற்கொண்டதா என்ற சந்தேகம் எழுதுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இன்னும் வெளிவராததால் மக்கள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர். ஈரான் ஒரு வார காலத்தில் போதுமான பிளவு பொருட்களை சேகரிக்கும் திறன் கொண்டது என்பதால் அணு ஆயுதம் சோதனை மேற்கொண்டதன் விளைவாகவே நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் கணித்துள்ளனர்.