பாகிஸ்தானில் இணையதளத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களில் சுமார் 15 லட்சம் பேர் ஒரு ஆண்டிற்குள் ஏதேனும் ஒரு வகையான டிஜிட்டல் பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்தைச் சந்திப்பதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
யுனிசெப், எக்பாட் சர்வதேச அமைப்பு மற்றும் இன்டர்போல் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட இந்த ஆய்வறிக்கை, ஆன்லைன் குற்றங்கள் வெறும் முன்பின் தெரியாத அந்நியர்களால் மட்டுமே நடக்கிறது என்ற எண்ணத்தை உடைத்துள்ளது. குழந்தைகள் தெரிவித்த 85 சதவீத சம்பவங்களில், அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களே இத்தகைய குற்றங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 44 சதவீத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவே நடந்துள்ளன.
பாகிஸ்தானில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளில் 16-ல் ஒருவர் இத்தகைய அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். ஆனால், பயம், சமூகப் பழிச்சொல் மற்றும் குடும்பத்தினரின் கண்டிப்புக்கு பயந்து பல குழந்தைகள் உதவி கேட்கத் தயங்குகின்றனர். குறிப்பாக, ஆண் குழந்தைகள் சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் தயக்கம் காரணமாக தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் யாரிடமும் இதைப் பகிர்வதில்லை என்றும், காவல் துறை அல்லது உதவி எண்கள் போன்ற அதிகாரப்பூர்வ வழிகளில் புகார் அளிப்பதே இல்லை என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சியும், செயற்கை நுண்ணறிவும் (AI) குழந்தைகளுக்குப் புதிய ஆபத்துகளை உருவாக்கியுள்ளன. போலி படங்கள் (Deepfakes), ஆன்லைன் மிரட்டல்கள் மற்றும் பாலியல் அச்சுறுத்தல்கள் மூலமாக குழந்தைகள் குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.