தொழில்நுட்பம்

மினிமம் பேலன்ஸே 50 ஆயிரமா? ஷாக் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி.. விமர்சிக்கும் நெட்டிசன்கள்

By MUTHUKRISHNAN
09 Aug 2025, 05:27 PM
ஐசிஐசிஐ வங்கி அதன் அனைத்து கிளைகளிலும், சேவிங்ஸ் கணக்கிற்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத் தொகையினை (மினிமம் பேலன்ஸ்) ரூ.50,000-வரை உயர்த்தியுள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் நோக்கத்தோடு வங்கியில் டெபாசிட் செய்து வருகின்றனர். ஆனால், சமீப நாட்களாக தனியார் துறை வங்கிகள் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக கட்டணங்களை வசூலித்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியினை உண்டாக்கியது.

இந்நிலையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பினை பன்மடங்கு அதிகரித்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு புதியதாக ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடரும் வாடிக்கையாளருக்கு தான் என்றாலும், பழைய வாடிக்கையாளர்கள் வங்கியின் நடவடிக்கைகளை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.

பெருநகரங்கள்/மெட்ரோ (Metro and Urban Locations) பகுதிகளில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் கணக்கு தொடர்பவர்களின் வங்கிக்கணக்கில் குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்பு (Minimum Average Balance) ரூ.50,000- இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.10,000 ஆக தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல் நகர்புறங்களில் (Semi urban locations) உள்ள வங்கிக்கிளையில் குறைந்தப்பட்ச மாதாந்திர சராசரி இருப்புத்தொகை ரூ.25,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த தொகை ரூ.5000 மட்டுமே இருந்தது. கிராமப்புற வங்கி கணக்குகளுக்கு மாதாந்திர மினிமம் பேலன்ஸ் ரூ.2500-லிருந்து ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை குறைந்தப்பட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையினை வாடிக்கையாளர் பராமரிக்கவில்லை எனில், பற்றாக்குறையில் 6 சதவீதம் அல்லது ரூ.500 (இதில் எது குறைவோ) அபராதமாக விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31-க்கு முன்பு வரை ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு தொடங்கியவர்கள், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய குறைந்தபட்ச இருப்புத் தொகையின் அளவுக்கு பராமரிக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கியின் இந்த முடிவு தனியார் வங்கிகள் மத்தியில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கியினை தொடர்ந்து மற்ற வங்கிகளும் மினிமம் பேலன்ஸ் கட்டணத்தை உயர்த்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பல பயனர்கள், ஐசிஐசிஐ வங்கியின் முடிவினை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்பதனை ரத்து செய்து வரும் சூழ்நிலையில், பல தனியார் வங்கிகள் குறைந்த மினிமம் பேலன்ஸ் தொகையினை பராமரிக்க அறிவுறுத்தி வருகின்றனர். திங்கள்கிழமை பங்குச்சந்தைகள் தொடங்கும் போது, ஐசிஐசிஐ வங்கியின் பங்கு ஆட்டம் காண வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.