தொழில்நுட்பம்

Google Pay-ல் பண மோசடியா? வைரல் ஆடியோவால் மக்கள் அச்சம்!

By Christon
08 Apr 2026, 04:53 PM
கூகுள் பே-வில் பணம் மோசடி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் குறிப்பாக வாட்ஸ்அப் செயலியில், 'கூகுள் பே (GPay) செயலியில் உள்ள இதய வடிவிலான கைகுலுக்கும் சின்னத்தைத் தொட்டால் வங்கிப் பணம் திருடப்படும்' எனப் பரவி வரும் ஆடியோ முற்றிலும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது.

சமீபகாலமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு ஆடியோ பதிவில், கூகுள் பே செயலியில் நாம் கடைசியாகப் பணம் அனுப்பிய நபரின் பெயருக்கு அருகில் தோன்றும் 'இதய வடிவிலான கைகுலுக்கும் சின்னத்தை' அழுத்தினால், சில நொடிகளில் வங்கி கணக்கில் உள்ள மொத்தப் பணமும் திருடப்பட்டுவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடியோவைப் கேட்டுப் பீதியடைந்த பலரும், இதனைத் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது தொழில்நுட்ப ரீதியாக முற்றிலும் தவறானத் தகவல் என்பது உறுதியாகியுள்ளது.

உண்மை என்ன? அது 'யூபிஐ சர்கிள்' வசதி!

உண்மையில் அந்தச் சின்னம் எந்தவொரு மோசடியும் அல்ல. கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள 'யூபிஐ சர்கிள்' (UPI Circle) அல்லது 'பாக்கெட் மணி' என்ற புதிய பாதுகாப்பு வசதியே அதுவாகும். வங்கி கணக்கு இல்லாத குடும்ப உறுப்பினர்கள் அல்லது சிறுவர்கள், தங்களது வீட்டில் உள்ள பெரியவர்களின் வங்கி கணக்கைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இந்த வசதி உதவுகிறது. உதாரணமாக, ஒரு தந்தை தனது மகனை இந்த 'சர்கிள்' வசதியில் இணைத்தால், மகன் செய்யும் செலவுகளுக்குத் தந்தையின் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்படும்.

பாதுகாப்பான டிஜிட்டல் வசதி

இந்த முறையில், முதன்மைப் பயனர் (தந்தை/பெரியவர்) தனது கணக்கின் மூலம் மற்றவர்களுக்குப் பணம் செலுத்தும் அதிகாரத்தை வழங்குகிறார். இதன் கீழ் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 15,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும். வங்கி கணக்கு இல்லாத முதியவர்கள் அல்லது குழந்தைகளுக்கு இது ஒரு பாதுகாப்பான 'டிஜிட்டல் பாக்கெட் மணி'யாகச் செயல்படுகிறது. எனவே, அந்தச் சின்னத்தைத் தொடுவதால் உங்கள் பணம் தானாகப் பறிபோகாது; அது உங்கள் குடும்பத்தினருக்குப் பணப் பகிர்வு வசதியைத் தொடங்குவதற்கான ஒரு விருப்பத் தேர்வு மட்டுமே.