கடந்த ஒரு மாதம் காலமாகவே விராட் கோலி, ரோகித், ஹென்ரிச் கிளாசென் என முன்னணி கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு முடிவினை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. இவர்களது வரிசையில் தற்போது பியூஷ் சாவ்லாவும் இணைந்துள்ளார்.
இந்தியா கிரிக்கெட் அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்றபோது அந்த அணிகளில் ஒருவராக இடம்பிடித்திருந்த அனுபவமிக்க லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா, இன்று அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 36 வயதாகும் சாவ்லா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து உணர்ச்சிகரமான பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அவரின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எவ்வளவு வயது ஆனாலும், குழந்தை முகம் போல் காட்சியளிப்பவர் சாவ்லா. 2005-ல் தனது முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். அவரது கூக்ளி வீசும் திறன் இந்திய அணியில் அவருக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்தது. 2006-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் வாயிலாக சர்வதேச கிரிக்கெட்டில் தன் தடத்தை பதித்தார்.
ஐபிஎல் தொடரில் அசத்தல்:
2007 டி20 உலகக் கோப்பையின் போது ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை என்றாலும், முதல் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அவரும் ஒரு நபராக இருந்தார். 2011 ஒருநாள் உலகக் கோப்பையில், அவர் மூன்று போட்டிகளில் விளையாடி சிறப்பான பங்காற்றினார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஸ் சாவ்லா அதன் முறையே 7, 32 மற்றும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்காத நிலையில், ஐபிஎல் தொடரில் தனது விக்கெட் வீழ்த்தும் திறனை வெளிப்படுத்தியதுடன், பேட்டிங்கிலும் குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் (இப்போது பஞ்சாப் கிங்ஸ்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் சாவ்லாவும் ஒருவர். அவர் கடைசியாக 2024 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். 192 ஐபிஎல் போட்டிகள் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா, 624 ரன்கள் எடுத்துள்ளார். 192 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஐபிஎல் ஏலத்தில் பியூஷ் சாவ்லாவினை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. தொடர்ச்சியாக பல இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் வாய்ப்புகாக காத்திருக்கும் நிலையில், சாவ்லா ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.