விளையாட்டு

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

By MUTHUKRISHNAN
02 Jun 2025, 04:00 PM
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் மட்டும் விராட் கோலி, ரோகித் உட்பட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு முடிவினை அறிவித்து வருவது தொடர் கதையாகி உள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக வலம் வந்த ஹென்ரிச் கிளாசென் திடீரென தனது ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார்.

ஓய்வு முடிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஹென்ரிச். தனது பதிவில், “இது தனக்கு ஒரு சோகமான நாள் என்றும், எதிர்காலத்தில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எது சிறந்தது என்பதை தீர்மானிக்க நீண்ட காலம் எடுத்ததாகவும், தனது இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதுதான் என்று” குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Heinrich Klaasen (@heinie45)



கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20

ஜூலை 30, 1991 அன்று பிரிட்டோரியாவில் பிறந்த கிளாசென், வலது கை பேட்டர் மற்றும் கீப்பர் ஆவார். எந்த வரிசையில் இவர் களமிறங்கினாலும், வானவேடிக்கை நிச்சயம் எதிர்பார்க்கலாம். பந்துகளை நாலாப்புறம் விளாசி பறக்கவிடுவார்.

ஒருநாள்,டெஸ்ட்,டி20 என மொத்தம் 122 சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 60 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹென்ரிச், 2141 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும், 7 அரைச்சதங்களும் அடங்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 174 ரன்கள் குவித்தது அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

58 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள கிளாசென், 1000 ரன்களைக் கடந்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் அடங்கும். பேட்டிங் தவிர்த்து விக்கெட் கீப்பராக, டெஸ்ட் போட்டிகளில் 10 கேட்ச்களையும் 2 ஸ்டம்பிங்கையும், ஒருநாள் போட்டிகளில் 51 கேட்ச்களையும் 7 ஸ்டம்பிங்கையும், டி20 சர்வதேசப் போட்டிகளில் 33 கேட்ச்களையும் 5 ஸ்டம்பிங்கையும் செய்துள்ளார்.

அடையாளம் காட்டிய ஐபிஎல்:

சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டிற்காக விளையாடி இவர் புகழ்பெற்றதை விட ஐபிஎல் போன்ற பிரிமியர் லீக் தொடர் மூலம் தான் பலரின் மனதில் பதிந்தார். 49 ஐபிஎல் போட்டிகளில், 40.00 சராசரியுடன் 1480 ரன்கள் குவித்துள்ளார், அவரது ஸ்ட்ரைக் ரேட் 169.72. இதில் இரண்டு சதங்களும், ஏழு அரைச்சதங்களும் அடங்கும்.

ஐபிஎல் தவிர்த்து SA20, MLC போன்ற பிற டி20 லீக்குகளிலும் கிளாசென் விளையாடி வருகிறார். 2018 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகிய நிலையில், ஏழே ஆண்டுகளில் ஓய்வு முடிவினை அறிவித்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து டி20 லீக் தொடர்களில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.