நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். முதல் ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் எடுத்து பாண்டிங்கின் சாதனையைச் சமன் செய்திருந்த விராட் கோலி, 2-வது ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் சேர்த்ததன் மூலம் அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 7 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 1,978 ரன்கள் குவித்துள்ளார். இப்பட்டியலில் ரிக்கி பாண்டிங் (1,971 ரன்கள்) இரண்டாவது இடத்திலும், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் (1,750 ரன்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இலங்கை முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கரா (1,568 ரன்கள்) மற்றும் சனத் ஜெயசூர்யா (1,519 ரன்கள்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரல் மிட்சல் 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குர்னூர் ப்ரார் 4 விக்கெட்டுகளையும், அன்சுல் கம்போஜ், அக்சர் படேல் மற்றும் ஆகிப் நபி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
எளிய இலக்கை நோக்கிப் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி பவுண்டரியுடன் கணக்கைத் தொடங்கிய போதிலும், 7 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்து வெளியேறினார். இருப்பினும் இந்த 7 ரன்கள் மூலம் வரலாற்றுச் சாதனையை கோலி பதிவு செய்துள்ளார்.