விளையாட்டு

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று அசத்திய பராகுவே.. வெளியேறியது ஜெர்மனி!

By Christon
30 Jun 2026, 07:10 AM
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-ஆவது உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில், 4 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

அமெரிக்காவின் போஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் 42-ஆவது நிமிடத்தில், பராகுவே வீரர் ஜூலியோ என்சிசோ முதல் கோலை அடித்துத் தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் பராகுவே 1-0 என முந்தியது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 54-ஆவது நிமிடத்தில், ஜெர்மனியின் நட்சத்திர வீரர் கை ஹாவெர்ட்ஜ் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட 30 நிமிட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டம் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்கப் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி அணி தனக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே கோல் அடிக்கத் தவறியது. மொத்தம் 6 முறை கோல் அடிக்கக் கிடைத்த வாய்ப்புகளில், ஜெர்மனி 3 முறையை மட்டுமே கோலாக மாற்றியது.

ஆனால், பராகுவே அணி மிகத் துல்லியமாக 4 வாய்ப்புகளைக் கோல்களாக மாற்றி அசத்தியது. இதன் மூலம் பெனால்டி ஷூட்அவுட்டில் 3-4 என்ற கணக்கில் பராகுவே வரலாற்று வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது; தோல்வியடைந்த பலம் வாய்ந்த ஜெர்மனி அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து கண்ணீருடன் வெளியேறியது.