விளையாட்டு

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!

By Christon
18 Jun 2026, 07:04 AM
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில், குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
வட அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எல்' பிரிவு லீக் ஆட்டத்தில், குரோஷியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற 'எல்' பிரிவின் லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் நட்சத்திர வீரர் ஹேரி கேன் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து அதிரடி காட்டிய குரோஷியா அணி 36-வது நிமிடத்தில் பதிலடி கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

முதல் பாதியில் சமநிலை

அதன் பின்னர் ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் டெக்லான் ரைஸ் கொடுத்த அசிஸ்ட் மூலமாக ஹேரி கேன் தனது இரண்டாவது கோலை பதிவு செய்து இங்கிலாந்தை 2-1 என மீண்டும் முன்னிலைக்குக் கொண்டு சென்றார். எனினும், விடாக்கண்டனாக ஆடிய குரோஷியா அணி முதல் பாதியின் இறுதி நிமிடத்தில் (45-வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்ததால், ஆட்டத்தின் முதல் பாதி 2-2 என்ற கணக்கில் விறுவிறுப்பான சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாம் பாதியில் இங்கிலாந்து ஆதிக்கம்

தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கிய உடனே, அதாவது 47-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி 3-வது கோலை அடித்து 3-2 என ஆதிக்கத்தை மீட்டெடுத்தது. அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான கூட்டு முயற்சியால் மற்றொரு கோலும் அடிக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஹேரி கேன் 2 கோல்களும், ஜூட் பெல்லிங்ஹாம் மற்றும் மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.