விளையாட்டு

FIFA: உலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - எகிப்து மற்றும் சவுதி - உருகுவே மேட்ச் 'டிரா'!

By Christon
16 Jun 2026, 07:17 AM
23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.
23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான 'டிரா'வில் முடிவடைந்துள்ளன.

பெல்ஜியம் - எகிப்து மோதல்

சியாட்டிலில் நடைபெற்ற குரூப் 'ஜி' பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் எகிப்து அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் 20-ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சலாஹ் கொடுத்த அசிஸ்ட்-ஐ பயன்படுத்தி, எமாம் அஷௌர் அதிரடியாக ஒரு கோல் அடித்து எகிப்தை முன்னிலை பெறச் செய்தார். இதனால் முதல் பாதியில் எகிப்து 1-0 என முன்னிலையில் இருந்தது.

தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணி தங்களது வியூகத்தை மாற்றி மூன்று புதிய வீரர்களைக் களமிறக்கியது. இந்த சப்ஸ்ட்யூட் மாற்றம் அந்த அணிக்குக் கை கொடுத்தது. ஆட்டத்தின் 66-ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் முகமது ஹானி கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. அதன்பின் இரு அணிகளும் தீவிரமாக முயன்றும் கூடுதல் கோல் அடிக்க முடியாததால் ஆட்டம் டிராவில் முடிந்து, தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.

சவுதி - உருகுவே மோதல்

இதேபோல் மியாமியில் நடைபெற்ற குரூப் 'எச்' பிரிவு லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் களம் கண்டன. ஆரம்பம் முதலே இரு அணிகளும் தீவிரத் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் கோல் அடிக்கப் போராடினார். முதல் பாதி முடியவிருந்த தருணத்தில் (41-வது நிமிடம்), சவுதி அரேபியாவின் அப்துல்லேலா அல்-அம்ரி ஒரு சிறப்பான கோல் அடித்து தன் அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் வேகத்தை அதிகரித்த உருகுவே அணி, சவுதிக்குக் கடும் அழுத்தம் கொடுத்தது. இதன் பலனாக ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் அந்த அணியின் மாக்ஸி அரௌஜோ கோல் அடித்து 1-1 என சமநிலையை உருவாக்கினார். இறுதிவரை இந்த நிலை நீடித்ததால் இப்போட்டியும் டிராவில் முடிவடைந்தது. இந்த டிரா காரணமாக குரூப் 'எச்' பிரிவில் உள்ள அனைத்து அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் இருப்பதால், நாக்-அவுட் சுற்றுக்கான போட்டி மேலும் விறுவிறுப்படைந்துள்ளது.