உலகில் ஒட்டுமொத்த விளையாட்டு ரசிகர்களின் பெரும் திருவிழாவான 23-வது ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11-ஆம் தேதி மெக்ஸிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரலாற்றிலேயே முதல்முறையாக 48 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டு வருகின்றன. லீக் சுற்றுகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தைப்பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் அடுத்த நாக் அவுட் சுற்றுக்குத் தகுதிபெறும். இச்சூழ்நிலையில், இன்று நடைபெற்ற குரூப் 'பி' பிரிவின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில் கனடா மற்றும் போஸ்னியா அணிகள் நேருக்கு நேர் மோதின.
ஆட்டம் தொடங்கிய முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கக் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 21-வது நிமிடத்தில் போஸ்னியா அணியின் வீரர் ஜோவோ லுகி ஒரு சிறப்பான கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலையைத் தேடித்தந்தார். இதன் காரணமாக ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் போஸ்னியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், எப்படியாவது கோல் திருப்பிச் சமநிலை செய்ய வேண்டும் என்று கனடா வீரர்கள் தீவிரமாகப் போராடினர். அதன் பலனாக, ஆட்டத்தின் 78-வது நிமிடத்தில் கனடா வீரர் செலி லரின் ஒரு அதிரடி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. இறுதி நிமிடம் வரை இரு அணிகளும் அடுத்த கோலை அடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் (Draw) முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்ட நிலையில், புள்ளிப் பட்டியலில் கனடா முதலிடத்திலும், போஸ்னியா இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றன.