விளையாட்டு

FIFA: "மெஸ்ஸிக்காக அநீதி இழைக்கப்பட்டது" - எகிப்து பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!

By Christon
08 Jul 2026, 10:08 AM
எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் நடைபெற்ற 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான 16-வது சுற்று நாக்-அவுட் போட்டியில், எகிப்து அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தோல்விக்குப் பிறகு எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹசன், நடுவர்களின் முடிவுகள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அர்ஜெண்டினாவின் அசாத்திய கம்பேக்

இப்போட்டியின் 67-வது நிமிடம் வரை எகிப்து அணி 2-0 என்ற கணக்கில் பலமான முன்னிலையில் இருந்தது. ஆனால், ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடப்பு உலக சாம்பியனான அர்ஜெண்டினா விஸ்வரூபம் எடுத்தது. 79-வது நிமிடத்தில் கிறிஸ்டியன் ரொமேரோவும், 84-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸியும் அடுத்தடுத்து கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தனர். தொடர்ந்து விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+2-வது நிமிடம்), என்சோ பெர்னாண்டஸ் அர்ஜெண்டினாவின் வெற்றிக்கான கோலை அடித்தார். இதன் மூலம் 3-2 என்ற கணக்கில் வென்ற அர்ஜெண்டினா, காலிறுதியில் சுவிட்சர்லாந்துடன் மோதத் தகுதி பெற்றது.

"மெஸ்ஸிக்காக ஏமாற்றப்பட்டோம்"

போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எகிப்து பயிற்சியாளர் ஹசன், "நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டோம். எங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு பெனால்டி வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, அது VAR மூலம் கூட சரிபார்க்கப்படவில்லை. நாங்கள் அடித்த இரண்டாவது கோலும் ரத்து செய்யப்பட்டது. ஒருவேளை நடப்பு உலக சாம்பியன் தொடர வேண்டும் என்பதற்காகவோ அல்லது மெஸ்ஸி தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதற்காகவோ இப்படிப்பட்ட அநீதியான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம்" என்று நடுவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.

ரசிகர்களிடையே வெடித்த விவாதம்

எகிப்து பயிற்சியாளரின் இந்த சர்ச்சை பேச்சு கால்பந்து ரசிகர்களிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர், உலகக் கோப்பைத் தொடரை விறுவிறுப்பாக மாற்றவே இரண்டாம் பாதியில் நடுவர்கள் அர்ஜெண்டினாவுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மற்றொரு தரப்பினரோ, போட்டி முற்றிலும் நியாயமாகவே நடைபெற்றது என்றும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் எகிப்து அணிக்கு வேண்டும் என்றும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.