விளையாட்டு

ரொனால்டோ திருமணம்: 10 ஆண்டுகால லிவ்-இன்க்கு முற்றுப்புள்ளி

By Christon
12 Aug 2026, 12:42 PM
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

41 வயதான ரொனால்டோவும், 32 வயதான ஸ்பெயின் மாடலும் தொழில்முனைவோருமான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் சுமார் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2025-ம் ஆண்டு இருவரும் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனுக்கு அருகிலுள்ள கடலோர நகரமான கஸ்காய்ஸில் ஆகஸ்ட் 11-ம் தேதி இருவரும் நெருங்கிய குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களது திருமண மோதிரங்களின் புகைப்படத்தையும் இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

ரொனால்டோ மற்றும் ஜார்ஜினாவுக்கு அலானா மார்டினா, பெல்லா எஸ்மெரால்டா என இரண்டு மகள்கள் உள்ளனர். ரொனால்டோவின் மற்ற மூன்று குழந்தைகளையும் சேர்த்து, குடும்பமாக ஐந்து குழந்தைகளை இருவரும் வளர்த்து வருகின்றனர்.

மாட்ரிட்டில் உள்ள குச்சி விற்பனையகத்தில் பணியாற்றியபோது ஜார்ஜினாவை ரொனால்டோ முதன்முதலில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரது காதல் உறவு தொடர்ந்து வந்தது.

கால்பந்து களத்திலும் ரொனால்டோ தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறார். போர்ச்சுகல் அணிக்காக 146 சர்வதேச கோல்களை அடித்துள்ள அவர், சர்வதேச கால்பந்தில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை தக்கவைத்துள்ளார். மேலும், 5 முறை பலோன் டி'ஓர் விருதையும் வென்றுள்ளார்.

நீண்டகால காதலுக்கு பிறகு ரொனால்டோவும் ஜார்ஜினாவும் திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.