அண்மை

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு... மீட்புப் பணி தீவிரம்; 3 பேர் உயிரிழப்பு!

By Sumalekha
07 Jul 2026, 03:48 PM
வயநாட்டில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவில் தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் காலையிலிருந்து தீவிரமான நிலையில் தற்போது 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு மாவட்டம் கள்ளாடியில் உள்ள மீனாட்சி பாலம் அருகே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் சுரங்கப் பாதை சாலைத் திட்டப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு அருகிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இப்பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 265 மி.மீ அளவுக்குக் கடுமையான மழை பதிவாகியுள்ளது. இந்தத் தொடர் மழையே நிலச்சரிவுக்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்டவுடன் உள்ளூர் மக்கள் உடனடியாகச் செயல்பட்டுப் பலரை பத்திரமாக மீட்டனர். அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இரண்டு பேரை மீட்டதுடன், மேலும் ஐந்து பேரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) தற்போது மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் சுரங்கப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதியின் அருகே சில வீடுகளும் தங்கும் விடுதிகளும் இருந்தாலும், அவற்றுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல் ஆய்வைத் தொடர்ந்து தற்போது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இனிமேலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

மேலும் கேரள வேளாண்மைத்துறை அமைச்சர் டி.சித்திக் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்பார்வையிட்டு வருகின்றனர்.