அண்மை

தங்க மோதிரம் வேண்டாம்; அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துங்கள்! - திருமாவளவன் வலியுறுத்தல்

By Sumalekha
24 Jun 2026, 07:55 PM
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளிலும், மீதமுள்ள 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளிலும் நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். அதிக கட்டணம் இருந்தபோதிலும், தாய்-சேய் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்கள்கூட தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.755 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள தங்க மோதிரத் திட்டத்துக்குப் பதிலாக, அந்த நிதியை அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகளை தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக மேம்படுத்தவும், தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமிக்கவும் பயன்படுத்தலாம் என்று திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் தங்க மோதிரம், சில மாதங்களிலேயே குழந்தைகளின் கைகளுக்கு பொருந்தாமல் போய்விடும் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தவெகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், திருமாவளவனின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.