Kumudam News 24 X 7 AMP Article
அண்மை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்...கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

By Jayakumar
13 May 2025, 11:12 AM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரம் மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தமிழகத்தையே உலுக்கியது.

பாலியல் வன்கொடுமை வழக்கு

இதை அடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரி ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு, ஹேரேன் பால், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து துன்புறுத்துதல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்களை பகிறுதல் உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதான ஒன்பது பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது 2019 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி முதல் கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.கோவை மகளிர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் பிறகு வழக்கு விசாரணை தாமதமானது. அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்

மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதங்கள் முடிவடைந்தது.இதை அடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என கடந்த 28ஆம் தேதி நீதிபதி நந்தினி தேவி தெரிவித்தார். இந்நிலையில் நீதிபதி நந்தினி தேவி கரூர் மாவட்டம் குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டார். பொள்ளாச்சி வழக்கு காரணமாக மறு உத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினி தேவி அதே நீதிமன்றத்தில் பணியாற்றுவார் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தது. இதனால் அவர் கோவையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இன்று தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் இந்த வழக்கில் கைதான 9 பேர் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக அவர்கள் சேலம் சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் இன்று காலை 10 மணிக்கு அளவில் கோவை நீதிமன்றம் அழைத்து வரப்பட்டனர்.

9 பேரும் குற்றவாளிகள்

பின்னர் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டு தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை விவரங்கள் மதியம் 12 மணியளவில் வாசிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் தண்டனை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு காரணமாக இன்று நீதிமன்ற வளாகத்தில் பலத்த சோதனை செய்யப்பட்டது.மேலும் அசாம்பாவிதங்கள் ஏதுவும் நிகழாத வண்ணம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தரமோகன், “9 பேருக்கான தண்டனை விவரங்கள் நண்பகல் 12 மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார். 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தாமாக முன்வந்து வழக்கில் சாட்சியளித்தனர். வழக்கில் ஒருவர் கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை” என தெரிவித்தார்