இந்தியா - பாக். போர் பதற்றம்

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

By Sumalekha
26 Jun 2026, 06:43 PM
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, மே 7-ஆம் தேதி இந்திய ராணுவமும் விமானப்படையும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியத் தாக்குதலில் அழித்தன.

இதையடுத்து, எல்லைப்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இரு நாட்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு, மே 9-ஆம் தேதி இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தை எட்டின.

இந்த மோதலில் 6 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், அவர்களின் பெயர்களை தற்போது முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் புதுதில்லி தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள 'தியாகச் சக்கரத்தில்' பொறிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரர்களின் பட்டியலில் இவர்களும் இடம்பெற்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர்கள் பெயர்:

சுபேதார் மேஜர் பவண்குமார்
சுனில் குமார் (வீர் சக்ரா விருது பெற்றவர்)
லான்ஸ் நாயக் தினேஷ் குமார்
முரளிநாயக்
ஹவில்தார் சுனில் குமார் சிங்
சர்ஜென்ட் சுரேந்திர குமார் (வாயு சேனா பதக்கம் பெற்றவர்)