Latest News

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை- மதுரை நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

By Christon
06 Apr 2026, 06:03 PM
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில், சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரைக் கைது செய்தது. கடந்த மாதம் 23-ஆம் தேதி இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை அவர்களுக்கான தண்டனை விவரங்களை நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

"சட்டம் காப்பவர்களே சிதைப்பதா?" - நீதிபதியின் காட்டம்

தண்டனை விவரங்களை வாசித்த நீதிபதி, "காவல் நிலைய மரணங்கள் மிகவும் கொடியவை. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே இத்தகைய கொடூரமான செயலில் ஈடுபட்டிருப்பதைச் சாதாரணக் குற்றமாகச் கருத முடியாது" என்று குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கின் விவரங்களை வாசிக்கும்போதே மனம் பதைபதைப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆயுள் தண்டனை வழங்கினால் அது இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற காவலர்களுக்குப் பாடமாக அமையாது எனத் தெரிவித்தார்.

உச்சபட்ச தண்டனை மற்றும் அபராதம்

நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, முக்கியக் குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவருடன் சேர்த்து இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற 8 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சுமார் நான்கு ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்தத் தீர்ப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் பெரும் ஆறுதலைத் தந்துயுள்ளது.